
Please fill out the form below if you have a plan or project in mind that you'd like to share with us.
உலகின் முதல் மனிதன் தோன்றிய இடம் இந்திய நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரிக்கு தெற்கே இருந்து கடற்கோளால் அழிந்த 'குமரிக்கண்டம்' ஆகும். அம்மனிதன் நிச்சயம் 'தமிழனாக' தான் இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்கள் கூற்று. அங்கு தோன்றிய மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள ஏற்படுத்திய செய்கை மொழியும், சமிக்கைகளும் காலப்போக்கில் மொழியாக வளர்ச்சி பெற்றது. அப்படி முதல் மனிதன் பேசிய முதல் மொழி படிப்படியாக வளர்ச்சி பெற்று பல்வேறு காலக்கட்டத்திலும் அழியாது தனித்து இயங்கி வருகிறது. அம்மொழிதான் உயர்தனி செம்மொழியான 'தமிழ்' மொழியாகும். பண்டைய காலத்தில் எழுதுவதற்க்கும் , பேசுவதற்க்கும் மட்டுமே பிற மொழிகள் இலக்கணம் வகுத்த சூழலில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்து அகம், புறம் என பகுத்து வாழ்வை நெறிபடுத்திய மொழிதான் தமிழ் மொழி. இப்படி பல சிறப்புகளுடன் தமிழ் மொழி விளங்கிட காரணம் அதன் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்று. உலகிலேயே ஒரு மொழிக்கு தீவிர காதல் இருக்குமேயானல் அது தமிழ் மொழிக்காகதான் இருக்கும். 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்பது தற்காலத்தில் மட்டும் காணப்படும் பற்று இல்லை. நம் தமிழ் மொழி தோன்றிய காலத்திலிருந்தே அதன் மீது பற்றும் காணப்படுகிறது. அப்படி கொண்ட பற்றால் நம் முன்னோர் தமிழ் மொழியை சங்கம் வைத்து வளர்த்தனர். இப்படி பல புலவர்களும், மன்னர்களும், அறிவர்களும் சேர்ந்து மூன்று சங்கங்கள் நடத்தினர். இந்த மூன்று சங்கங்களில் தலை சங்கமான முதல் சங்கத்திலிருந்தே தமிழை வளர்த்த மாபெரும் அறிவர் (சித்தர்) 'அகத்தியர்’. இவரே தற்போது தமிழில் கிடைக்கும் மிகப்பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் ஆசிரியரும் ஆவார்.
அகத்தியர் காலகட்டதிலிருந்தே குறிப்பிடப்பட்ட மலையான 'பொதிகை' மலை தற்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையை பற்றி சங்ககாலம் முதல் தற்போது வரை அனைத்து இலக்கியங்களிலும் சான்றுகள் கிடைக்கபெறுகின்றன. புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, பரிபாடல், குறுந்தொகை, திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம், மகாபாரதம், இராமாயணம், மூவர் பாடிய தேவாரம், திருமுறை, திருப்புகழ், என பலவற்றிலும் பொதிகை மலை குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளது. இத்தகைய பழமையான பொதிகை மலையின் வேறு பெயர் அகத்தியர் மலை. அகத்தியர் தமிழ்புலவர்கள் புடை சூழ வாழ்கின்ற உறைவிடம் பொதிகை மலை, அதனை வணங்கிவிட்டு செல்வீராக என வானரங்களுக்கு சுக்ரீவன் எடுத்துக்கூறும் நிகழ்வு இராமாயணத்தில் உள்ளது. இன்றும் சித்த மருத்துவர்களின் மாபெரும் குருவான அகத்தியர் பொதிகை மலையில் இறைவடிவமாய் நின்று அருள்வழங்கி வருகிறார். பொதிகை மலையின் மற்றொரு பெயர் மருந்து தயாரிப்பாளர்கள் மலை / மருத்துவ மலை, ஆம் மேற்குதொடர்ச்சி மலையில் தெற்கு சரிவில் அதாவது பொதிகை மலை மற்றும் அதன் சுற்று பகுதியில் 500 மீட்டருக்கு மேல் காணும் ஈரமான இலையுதிர் காடுகள், 1000 மீட்டருக்கு மேல் உள்ள மழைக்காடுகள், அதற்கும் மேல் அமைந்துள்ள ஷோலா புல்வெளிமண்டலம் என இயற்கையின் அருங்காட்சியமாக விளங்கும் பொதிகை மலையில் 2000 வகைகளுக்கு அதிகமான மருத்துவ தாவரங்கள் உள்ளன. இன்னும் கண்டறியபடாத, கண்ணில் தெரியாத என ஏராளமான மூலிகைகளை கொண்டுள்ளது , ஏராளமான மூலிகைகள் மற்றும் உயிரினங்களை தன்னகத்தே கொண்டு இயற்கை எழில் சூழ, மேகங்கள் தவழும் குன்றுகளும், அருவிகளும், சிற்றோடைகளும் கொண்டு குளிர்ச்சியான காற்று வீசிடும் அழகுமிகுந்த மலையே பொதிகை மலை. "தமிழ் வளர்ந்ததும், தென்றல் பிறப்பதும் சந்தன பொதிகையில்" என்பர்.
தமிழுடனும், தமிழ் மக்களிடத்தும், தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்கும் கடவுள் முருகப்பெருமான் முதற்சங்க காலத்தில் தமிழ் வளர்த்த முன்னோர்களில் ஒருவர் என்பர். முருகன் தலை சிறந்த சித்தர் என்ற கருத்தும் காணப்படுகிறது. அனைத்து சித்தர்களும் தங்களது முதற்கடவுளாக கொண்டு வழிபட்டது முருகனையே. தமிழின் உருவாக்கத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் காரணமாய் இருந்தததுடன், தமிழ் மருத்துவத்தை படைத்து, காத்து வரும் முருகனின் பல பெயர்களில் ஒன்று பொதிகை.
இப்படி எல்லா வகையிலும் எனக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும், அறிவர்களான சித்தர்களுக்கும், தமிழர் மருத்துவமான சித்த மருத்துவதிற்கும் நெருங்கிய தொடர்பு கொண்ட மிக பழமையான, பாரம்பரியமிக்க பெயர் 'பொதிகை’. இத்தகைய சிறப்புகளை தாங்கிய எளிமையான பொதிகை எனும் பெயருடன், கடவுள் மற்றும் சித்தர்கள் வழிகாட்டுதலில், இயற்கையின் உதவியுடன் மருத்துவ சேவையை செய்திட உருவானதே 'பொதிகை சித்த மருத்துவ மையம்'.
Dr.V.சிவஞானம்,BSMS.,
பொதுநல சித்த மருத்துவர்
பொதிகை சித்த மருத்துவ மையம்